Monday, December 13, 2021

அழுகிப்போன நான் (என் பழைய பரணியிலிருந்து )

                                                                                    

 காலையிலே யார்டா கதவ தட்டுறது. எரிச்சலோடு கதவைத் திறந்தேன். கையில் தூக்குவாளியோடு கோமதி அத்த. இன்னைக்கு  பொங்கலுங்கிறதே அத்த பொங்கல் வாளியை  நீட்டும் போதுதான் ஞாபகமே வருது.

 

ஊருல இருந்தா ஊர் கூடி  பயலுவ ஒருபக்கமும் புள்ளயலுவ  ஒருபக்கமும் பொங்கல்  வைப்போம் மொதல்ல யார் பான பொங்குது ஆம்பள பானயா பொம்பள பானயா என்று  போட்டி   போட்டு தீ போடுவோம். நிமிசத்துக்கு   ஒருதடவ    பானைய எட்டி பாத்து  இப்பபொங்கிரும் இப்பபொங்கிரும்னு சத்தம் போட்டுக்கிட்டே தீய போடுவோம்   பொட்டப்புள்ளைங்க பான மொதல்ல பொங்குற மாதிரி தெரிஞ்சா அகப்பைய பானைக்குள்ள போட்டு கொஞ்ச பொங்கல பானைக்கு வெளிய கொதிச்ச மாதிரி ஊத்திட்டு  கொலஉட ஆரம்பிச்சிருவோம். இது கள்ள ஆட்டம்னு எங்கள தொரத்த ஆரம்பிப்பாங்க சண்டகிண்டன்னு போட்டுட்டு கடைசில சமாதனமாகி ஊருக்கே அந்த  பொங்கல கொடுப்போம்.

இன்னும் பல்லு வெலக்கல ஆனா பொங்கல் வாசம் இப்பவே சாப்டுடா மகேஷ்ன்னு சொல்ற மாதிரி என்னைய சுண்டி இழுக்க. தூக்கு வாளியை தொறந்து ஆட்காட்டி விரல வாளிக்குள்ள விட்டு கொஞ்சம் பொங்கல நாக்கில வச்சா அது நெய்யில வழுக்கி வயித்துல விழுந்திருச்சி. மறுபடியும் எடுக்க வாளிக்குள்ள  கைய விடும்போது நாரப்பய மவன. அவ்வளவும்  ஒனக்குத்தான் மொதல்ல பல்ல வேளைக்கு  இதுக்கு மேலேயும் வாளிய தொறந்தா  எங்க அத்த  சாமி ஆடிரும். பொங்கல் சாப்பிடறதுக்காகவே சீக்கிரம் பல்லுகில்லு வெளக்கி குளிச்சி முடிச்சி துணி மாத்தவும் மச்சான் போன் பன்னவும் சரியாயிருந்துச்சி. மாப்ள ஆஸ்பத்திரியில ஒரு டெஸ்ட் இருக்கு அவசரம் சிக்கிரம் போ.  அவசர அவசரமா கிளம்பி போயி டெஸ்ட முடிக்கிறதுக்குள்ள அருணாக்கா போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லிருச்சி. அப்படியிப்படின்னு அன்னைக்கு  முழுசும் ஒரே வேல.  ஓடியாடி அலஞ்சதுல ராத்திரி நல்ல தூக்கம்.

இன்னைக்கு மாட்டுபொங்கலுங்கிறது எந்திரிக்கும்போதே ஞாபகம் வந்திருச்சி. எந்திருச்சி முகமெல்லாம் கழுவிட்டு லேபுக்குள்ள  வந்தா  ஏதோ ஒரு வித்தியாசமான வாட அப்பதான் ஞாபகம்வந்திச்சி அத்த கொண்டுவந்த பொங்கல். மூடிய தொரக்கமலே தெரிஞ்சிச்சி அது கெட்டுப்போயிருச்சின்னு    காம்பவுன்டுக்கு  வெளிய கொட்டுறதுக்கு வாளிய  தொறக்கும்போதே நாத்தம் கொடலபுடுங்கிருச்சி. ஆறடி உயர சுவரது. அந்தபக்கம் ஒரு சின்ன  சாக்கட.  எட்டி வேகவேகமாக் கொட்டினேன். அய்யா இங்க போடுங்க, இங்க போடுங்க. ஒருநிமிடம் பதரிபோனேன் சுவருக்கு அந்தபக்கம் நிக்கிறவங்கள இங்கிருந்து பாக்க முடியாது வேக வேகமா லேபுக்குள்ள ஓடி ஸ்டூல எடுத்துபோட்டு மேல எரிப்பாத்தா  அஞ்சாறு சின்னப் புள்ளைங்க.  கொட்டின பொங்கல சாப்பிட்டுட்டு இருந்தாங்க  அவுங்க முதுகுல ஒரு சின்ன பை கையெல்லாம் சகதி அவங்கள பாக்கும்போதே தெரிந்தது பாலித்தின் பேப்பர் பொருக்கி விக்கிரவங்கன்னு . காம்பவுண்டுக்கு மேல என்ன பாத்ததும் அய்யா அய்யா கத்த ஆரம்பிச்சாங்க ஆண்டுகள் ஐந்து தொலைந்தபின்பும் இன்னும் அந்த பிஞ்சு குழந்தைகளின் சத்தம் மட்டும் என் நினைவில்...

                                                                                                                                          

 மே 26, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!