Wednesday, November 9, 2011

தமிழக அணுஉலைகள் ஒரு சிறப்பு பார்வை...2

(இந்த கட்டுரை நான் இணையதளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் படித்தது எந்த இணையதளத்தில் படித்தது என்று ஞாபகம் இல்லை மன்னிக்கவும் இந்த கட்டுரைகளில் குறிப்பிடபட்டிருக்கும், அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி,  பூஉலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமாரன். போன்றவர்களை பற்றிய தகவல்கள் கட்டுரைகள் இணையதளங்களில் ஏராளமாக இருக்கின்றது)

 


''மாற்றி யோசிக்கலாமே!''

அணு மின்சாரத்துக்கு மாற்றாகச் சில யோசனைகளை முன்வைக்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்அமைப்பைச்சார்ந்த சுந்தர்ராஜன்.


''
இந்தியாவிலேயே இரண்டு அணு உலைகள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டும்தான். மின்சாரத்துக்காக அணு உலை என்று சொல்வது, பீரங்கியைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது போன்றது! இந்தியாவின் மின்சாரத் தேவை தற்சமயத்தில் 1,70,000 மெகாவாட். ஆனால், நாடு முழுக்க இருக்கும் 20 உலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ வெறும் 4,780 மெகாவாட் மட்டும்தான்!தமிழகத்தில் மட்டுமே குண்டு பல்புகளை நீக்கி விட்டு சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்தினால், சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தினால், பெருமளவு மின்சாரம் மிச்சமாகும்! 2030-ல் நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நம் மின்சாரத் தேவை 6 முதல் 8 லட்சம் மெகாவாட் ஆக இருக்கும். அணுவைப் பயன்படுத்தி அதில், 6 முதல் 12 சதவிகித மின்சாரத் தேவையைத்தான் பூர்த்திசெய்ய முடியும் என்று அணு சக்தி ஆணையமே தெரிவித்து இருக்கிறது.மின்சாரத்தை உற்பத்தி செய்து அதைப் பகிர்ந்து அளிக் கும்போது, குறிப்பிட்ட சதவிகிதம் இழக்கிறோம். அதாவது, Transmission & Distribution Loss. உதாரணமாக: 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால், இறுதிப் பயன்பாட்டுக்கு 8,000 மெகாவாட்தான் நம்மிடம் இருக்கும். 2,000 மெகாவாட் பகிர்ந்தளிக்கும்போது வீணாகிவிடும். 2008-ல் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்நடத்திய ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக மின்சார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 27 சதவிகிதம் வீணாகிறது. இதைக் குறைப்பதில், கவனம் செலுத்தலாம்!அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பது, அதை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதம். ஆனால், அது முற்றிலும் தவறு. இயற்கையாகவே யுரேனியம் 238 கிடைக்கிறது. இதைச் செறிவூட்டினால் யுரேனியம் 35 கிடைக்கும். இதைத் தயாரித்தால்தான், அணு உலையின் செயின் ரியாக்ஷன் நடக்கும். இந்த யுரேனியத்தை எடுக்கும்போது கரியமில வாயுக்கள் வெளியேறும். ஆகவே, அணு மின்சாரம் மூலமாகவும் சூழல் கெடத்தான் செய்யும்.காற்றாலைத் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்சாரம், பயோமாஸ் எனப்படும் உயிர்த்திரள், புவிவெப்பச் சக்தி என மரபு சாரா முறையில் மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆபத்து அதிகமான அணு சக்தி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே உலகை நேசிக்கும் அனைவரின் கேள்வி!'' என்கிறார் சுந்தர்ராஜன்.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் குறைபாடுகளாக அந்தப் பகுதி மக்கள் முன் வைக்கும் பிரச்னைகள்!

அணு சக்திக் கழிவைக் கடலில் கலக்கிறார்கள். அதனால், கடல் நீர் உஷ்ணமாகி, மீன் வளம் குறைகிறது. நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது.அணுக் கழிவுகள் கலப்பதால், கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. அதனால், கடல்சார் சுற்றுச்சூழல் கெடுகிறது.தைராய்டு புற்று நோய், கரு கலைதல், மூளை வளர்ச்சி இன்றிப் பிறக்கும் குழந்தைகள், கை-கால் போன்ற உறுப்புகள் இன்றி குழந்தைகள் பிறத்தல் போன்றவை கதிர்வீச்சாலும் ஏற்பட்டு இருக்கலாம். மேலும், கதிர்வீச்சுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு உயிரணுக்களும் குறைவாக இருக்கின்றன.அணு மின் நிலையத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில், நிலையத்தில் பணியாற்றுபவர் களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு யாருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பது இல்லை.அந்த மருத்துவமனையில் அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, கதிர்வீச்சு தொடர்பான விபத்துக்களைக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை. உதாரணம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு நடவடிக்கை பயிற்சி நடத்த வேண்டும் என்பது சட்டம். ஒரு முறை அந்த நடைமுறையின்போது மக்களை அவசரமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் வாகனம் பஞ்சராகி நின்றது. வாக்கி-டாக்கி வேலை செய்யவில்லை!
கதிர்வீச்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சில தகவல்கள்...

கதிர்வீச்சைப் பொறுத்தவரை மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை!

2005-
ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர் கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது!அணுசக்தித் துறையில் மிகவும் முக்கியப் பிரச்னை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் கடல்வாழ் தாவரங்களில் எந்த அளவு இருக்கிறது என்பதை கல்பாக்கம் அணு நிலையத்தார் அளப்பதே இல்லை!கதிர்வீச்சினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகக் கண்டறியவே முடியாது என்பதுதான் இன்று நிதர்சனம்! உதாரணமாக, உடலில் கதிர்வீச்சு நேரடியாக ஸ்பரிசிக்காத உறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்பை By Stander Effect என்பார்கள். கதிர்வீச்சுப் பாதையில் உள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் பிரச்னை இது!
கூடங்குளம் நிலவரம் என்ன?


தகவல்: ஆமையடி அ மகேஷ்
நாடெங்கும் அணு மின் நிலையங்கள் அமைப்பதுபற்றி விவாதங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், திருநெல்வேலி கூடங்குளத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் அணு மின் நிலையம் இயங்க இருப்பதாகச் செய்தி! அதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமாரன்...


''
இந்த அணு மின் நிலையத்தை கடல் மணல் கலந்து கட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஜெய்தாபூர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, தாராபூரில் ஒரு ஒப்பந்தக் காரரைச் சந்தித்தேன். அவர் கூடங்குளத்தில் எட்டு ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்தவர். அங்கு நிறுவப்படும் பைப்கள் எல்லாம் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. எளிதில் உடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவித்தார். கூடங்குள அணு மின் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்வதாக முன்பு ஒருமுறை தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிச் செயல்படுத்துகிற திட்டம். இதுவரை எத்தனை முறை கடன் வாங்கி இருக்கிறார்கள்? அத்தனை கோடி ரூபாய்களுக்கு என்னென்ன செலவுகள் செய்து இருக்கிறார்கள்? ஏற்கெனவே நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கட்டு மானப் பணிகள் நடைபெறுகின்றனவா? இல்லை தாண்டி விட்டதா? எல்லாம் கேள்விகள்தான்!ஒரு வருடத்துக்கு முன்பு எஸ்.கே.அகர்வால், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். அணு மின் நிலைய இயக்குநராக இருந்தவரை, பதவி உயர்வு கொடுத்து, அணு சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்களில் நல்ல பதவி கொடுத்து, அவரை மாற்றல் செய்தார்கள். அப்படிப்பட்டவர் இறந்துபோன தகவல் குறித்து இதுவரையில் தகவல் வெளிவரவில்லை!சர்வதேச அணு சக்தி வல்லுநர்கள் குழு (World Association of Nuclear Operators - WANO) சில வருடங்களுக்கு முன்பு கூடங்குள அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் அந்த அணு மின் நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் கூட இருக்கவில்லை. அவர்கள் என்ன வகையான பரிசோதனைகளைச் செய்தார்கள், எதையேனும் ஆய்வு செய்து விளக்கம் அளித் தார்களா என்பதுபற்றி விவரங்கள் கேட்டு நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப் பித்து இருந்தேன். இதுவரைக்கும் பதில் இல்லை.இப்போதைய அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி, ஜப்பானில் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறார். சுனாமிக்குப் பிறகான கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் இந்த நிலையத்தைக் கட்டி இருக்கிறோம் என்கிறார். ஆனால், யார் அதை அளந்து பார்த்தது, அணு சக்தித் துறை நீங்கலாக, தன்னாட்சி அமைப்புகள் எதுவும் பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதைப்பற்றி எந்தக் கருத்தும் கூற மறுக்கிறார்!'' என்கிறார் உதயகுமாரன்!

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!