Wednesday, November 9, 2011

தமிழக அணுஉலைகள் ஒரு சிறப்பு பார்வை...1

(இந்த கட்டுரை நான் இணையதளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் படித்தது, எந்த இணையதளத்தில் படித்தது என்று ஞாபகம் இல்லை, மன்னிக்கவும். இந்த கட்டுரைகளில் குறிப்பிடபட்டிருக்கும், அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி,  பூஉலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமாரன். போன்றவர்களை பற்றிய தகவல்கள், கட்டுரைகள் இணையதளங்களில் ஏராளமாக இருக்கின்றது)


தமிழகத்தில் செர்னோபில் கல்பாக்கம்?

உலக வரலாற்றின் பக்கங்களில் ரசாயன நெடி பூசிய செர்னோபில் கொடூரம் அரங்கேறி, 25 வருடங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் அந்த இடத்தில் கதிர் வீச்சின் வீரியம் குறையவில்லை. ஆனால், அந்தக் கொடூர அனுபவத்தில் இருந்து இந்த உலகம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை... அல்லது கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது இன்னும் உறையச் செய்யும் அதிர்ச்சி!

அதிலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்... அவற்றில் கூடுதலாக இன்னும் சில அணு உலைகள் என விபரீதங்களுக்கு வரிசையாகக் கால்கோள் விழா எழுப்பிக்கொண்டு இருக்கிறோம்!
கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மை, தீமைகள் என்னென்ன? அந்தப் பகுதியில் அமைந்துள்ள சதராஸ் குப்பம், ஆயப்பாக்கம், பூந்தண்டலம், புதுப்பட்டணம் உட்பட ஏழு கிராமங்களுக்கும் சென்று வந்தோம்.

புவனேஸ்வரி. துறுதுறுவென விளையாடித் திரிய வேண்டிய நான்கு வயதுச் சிறுமி. குடிசையின் ஒரு மூலையில் சுருண்டுகிடந்தாள். ஒரு கையும் காலும் இல்லை. முகத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள். குடிசையை விட்டு வெளிச்சத்துக்கு அவளைத் தூக்கி வந்தாலே... அழுகிறாள்.தொடக்கப் பள்ளியில் நான்காவது படிக்கிறாள் பவித்ரா. படிப்பில் படு சுட்டி. டாக்டர் கனவு காண்கிற பவித்ராவுக்கு, கால்களில் வலு இல்லை. சுயமாக நடக்க முடியாது. நடக்கிற போது கால்கள் இரண்டும் பின்னிக்கொள்கின்றன. தாய் மட்டுமே துணை. துணை இன்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது. ஓடும் கால்கள், நடக்கும் கால்கள், குதிக்கும் கால்கள் என விளையாடும் நண்பர்களின் கால்களை, மைதானத்துக்கு வெளியே இருந்து ஏக்கத்துடன் பார்க்கிறாள்.விஜிக்கு 22 வயது. தன் வயதுப் பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்க, இவருக்கோ மூன்று முறை கரு கலைந்து போனது. 6 மாதங்கள் வரை வயிற்றில் கரு தங்கி, கலைந்துபோனது மூன்று முறையும். மருத்துவர் களால் என்ன காரணம் எனக் கண்டறியப்பட வில்லை.
இப்படி அந்தக் கிராமங்களில் பத்து வீடுகளுக்கு நான்கு வீடுகளில் ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தை இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்திருக்கிற அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி சில முக்கியத் தகவல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

''2003-
ல் நான் ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, அதில் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களில் உள்ளவர்கள் Multiple Myeloma எனும் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது, மூன்று பேர் 21 நாள் இடைவெளியில் இந்தப் புற்றுநோயால் அடுத்தடுத்து இறந்துபோனார்கள். எனவே, புள்ளியியல் அடிப்படையில் மிக முக்கியத்துவம் (Statistically Highly Significant) வாய்ந்தது என்று அந்த மரணங்களைப் பதிவு செய்தேன்.அதை எதிர்த்து, 'அப்படி எல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லைஎன்று அணு மின் நிலையத்தார் அப்போது ஓர் ஆய்வை மேற்கொண்டதாகச் சொன்னார்கள். அந்த ஆய்வு அறிக்கை நகல் ஒன்றைத் தாருங்கள் எனப் பல ஆண்டுகளாகக் கேட்டும், அவர்கள் தரவில்லை. கதிர் வீச்சின் பாதுகாப்பான அளவு (Safe Dose) குறித்து நான் அந்தப் பகுதி முழுக்க ஆய்வு மேற்கொள்ள முற்பட்டேன். அதற்காக, எங்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்த சில தொண்டு நிறுவனங்கள், என்ன காரணத்தினாலோ கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டன. மிரட்டல் காரணமாக இருக்கலாம். அணு மின் பணியாளர்கள் உள்வாங்கும் External & Internal Dose பற்றி நான் ஆய்வு நடத்தவும் அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.

2010-
ம் ஆண்டில் டிராஃபிக் ராமசாமி என் ஆய்வுகளை அடிப்படையாகவைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை புற்று நோயால் இறந்தவர்களின் பட்டியலைக் கேட்டு இருந்தார். அணு மின் நிலையத்தார், 10 வருடக் காலகட்டத்தில் இதுவரை 244 பேர் புற்று நோயால் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள். அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஓம் பால் சிங்கின் மகன் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவர் Ewig Sacome எனும் எலும்பு மஜ்ஜை நோயால் தாக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி, அவர் இறந்துவிட்டார். அணு சக்தித் துறையில் மிக முக்கியமானவராக இருக்கும் ஒருவரின் மகன் இறந்ததைக்கூட, அவர்கள் தந்த புள்ளிவிவரத்தில் பதிவு செய்யவில்லை. 244 கேஸ்களில் இந்த இறப்புபற்றி ஒரு செய்தியும் இல்லை.இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூஸிலாந்து நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 65 பேர் உயிரிழந்தனர். நில நடுக்கப் பதிவேடுகளில், அந்த இடத்தில் நில நடுக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனப் பதிவு செய்யப்பட்டு இருந்தபோதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை Blind Fault என்று அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault ஏற்பட வாய்ப்பு இல்லையா? முன்பு சென்னை நில நடுக்க அளவு 1-ல் இருந்தது. அதனால், நில நடுக்க அளவு 2-க்கு ஏற்றாற்போல, அணு உலையைக் கட்டி இருப்பார்கள். இன்று சென்னையின் நில நடுக்க அளவு 3-க்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு ஏற்றபடி அணு உலையில் என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்? 'நிச்சயமாக நாங்கள் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வோம்என்கிறார்கள் அணு நிலையத்தார். ஆனால், அந்த ஆய்வு யாரால் நிகழ்த்தப்படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்கிறார் புகழேந்தி.இரண்டு வாரங்களுக்கு முன்பு, அணு மின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தியும், 'கிரீன் பீஸ்அமைப்பின் அணு சக்திக்கு எதிரான செயல்பாட்டாளர் கருணா ரெய்னாவும், 'அணு மின் நிலையங்களில் உள்ள பாதுகாப்புபற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள். கருணா முன்வைத்த எந்த ஒரு கருத்தையும் ராமமூர்த்தி மறுக்கவில்லை. அவர் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிவிக்கவில்லை.நிகழ்ச்சியில், ''பாதுகாப்பான அளவு கதிர் வீச்சு பற்றிப் பேசுகிறீர்களே... உங்கள் பணியாட்கள் உள் வாங்கும் கதிர் வீச்சின் அளவு என்ன?'' என்று நான் கேட்டதற்கு, ''அதுபற்றி எனக்குத் தெரியாது. அது தொடர்பான நிபுணர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்றார். அணு மின் நிலையத்தின் இயக்குநராக இருப்பவருக்கு, இந்த சாதாரணத் தகவல்கூடத் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு நடை முறைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே, உதறலாக இருக்கிறது!மேலும் தன் உரையில் அவர், ''ஒருவேளை விபத்து ஏற்பட்டால், நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ. வரை என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கேற்றபடி நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பிட்ட கி.மீ-க்கு மேல் சென்றால், அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும். விபத்து ஏற்பட்டவுடன் நான் அவருக்குத் தகவல் தெரிவிப்பேன். அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார்'பொறுப்பாக’!

''
ஒருவேளை அப்படி விபத்து ஏற்பட்டால், மக்களை வெளியேற்ற என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ''நிலைய அலுவலர்களுக்கு, பணியாளர்களுக்கு எனத் தனித்தனியாக வாகனங்கள் வைத்திருக்கிறோம். அதில் அவர்களை ஏற்றி பத்திரமான இடங்களுக்குக் கொண்டுசெல்வோம்!''

''
எத்தனை வாகனங்களை வைத்திருக்கிறீர்கள்?''

''
ஏறக்குறைய 54 பேருந்துகள்!'' பேருந்துக்கு சுமார் 100 பேரை அமுக்கித் திணித்தாலும் அதிகபட்சம் 5,400 பேரை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும். ஆனால், அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 10,000-க் கும் மேல்!

''
உங்கள் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீங்கள் 'ரிஸ்க் அலவன்ஸ்தருவது இல்லையாமே?'' என்ற கேள்விக்கு, ''ஆம், தருவது இல்லை. காரணம், நாங்கள் அவர்களுக்கு எந்த ரிஸ்க்கும் தருவது இல்லை!'' என்றார் ஜோக் அடித்த தொனியில்!கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்காக, நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் நகரியம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்குள் உள்ள ஐந்து கிராமங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

1986,
மார்ச் மாதம் இந்த நிலையத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்துபோனது. ஜூன் மாதத்தில் 15 டன் கன நீர் கசிந்து வழிந்தது. 1999, மார்ச் 26 அன்று, அணு மின் நிலையம் 2-ல் ஏற்பட்ட கன நீர் கசிவு காரணமாக, ஏழு பேர் அதிகபட்சக் கதிர் வீச்சுப் பாதிப்புக்கு ஆளானார்கள். 2011, மார்ச் 19 அன்று அணு உலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார்த்திக் என்ற பணியாளர் இறந்துபோனார்.கடந்த ஏப்ரல் மாதம் இரவு தோன்றிய மின்னல் காரணமாக, கல்பாக்கம் முதல் அணு உலை மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப் பல விபத்துகள் நடந்து இருக்கின்றன.கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் எப்போதும் ரசாயன நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு கையும், காலும் இல்லாத குழந்தையின் அம்மாவிடம் கேட்டேன், ''ஏம்மா... ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனீங்களா? டாக்டர் என்ன சொன்னார்?''

''
எதனால இப்படி ஆச்சுன்னு எங்களையே கேட்கிறாங்க. என்ன பிரச்னை இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. என் குழந்தைக்கு விடிவுக் காலமே பொறக்காதா?''மின்சாரம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வல்லரசு என்று கதைப்பவர்கள்... இந்தக் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். மக்களை ஊனமாக்கிவிட்டு, தன்னிறைவு பெற்று என்ன செய்யப்போகிறீர்கள் விஞ்ஞானிகளே?
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!

அணு மின் நிலையத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!அமெரிக்காவில் கதிர்வீச்சால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு Energy Employees Occupational Illness Compensation Program Act இருப்பதுபோல இங்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.நில நடுக்க அளவு 3-க்கு ஏற்றாற்போல அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த வேண்டும்!
தொடர்ச்சி தமிழக அணுஉலைகள் ஒரு சிறப்பு பார்வை...2

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!